
நாரி ஸ்தனபர நாபிதேசம்
த்ருஷ்வா மாகா மோஹாவேசம்
ஏதன் மாம்ஸ வஸாதி விகாரம்
மனஸி விசிந்தய வாரம் வாரம்
நாரி - அழகான பெண்களின்
ஸ்தனபர - அழகிய கொங்கைகளையும்
நாபிதேசம் - வயிற்றுப் பிரதேசங்களையும்
த்ருஷ்வா - பார்த்து
மாகா மோஹ ஆவேசம் - மயக்க ஆவேசம் அடையாதீர்கள்.
ஏதன் - இவையெல்லாம்
மாம்ஸ வஸ ஆதி விகாரம் - புலால், கொழுப்பு மற்றும் அது போன்ற பொருட்களின் மாற்று வடிவங்கள்
மனஸி விசிந்தய வாரம் வாரம் - மனதில் இதனை மீண்டும் மீண்டும் நினைத்துக் கொள்ளுங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
புலனடக்கம் மேற்கொண்டு தன்னை உணர விரும்புபவர்களுக்கு ஏற்ற அறிவுரை இது. இங்கே ஆணை முன்வைத்துப் பெண்ணின் அழகைப் பற்றி சொல்கிறார். ஆணின் திரண்ட தோள்களையும் நிமிர்ந்த நெஞ்சினையும் வீரம், அன்பு தெறிக்கும் முகத்தையும் கண்களையும் காது மடல்களையும் கூரிய மூக்கினையும் சிவந்த வாயிதழ்களையும் அந்த இதழ்களின் மேல் வளர்ந்திருக்கும் முறுக்கு மீசையையும் பற்றி பல இலக்கியங்கள் பேசுகின்றன - அப்படிப் பேசப்படுவதாலும் நடைமுறையில் பார்ப்பதாலும் ஆணின் இந்த அழகுகள் பெண்ணைக் கவர்கின்றன என்று தெரிகிறது. அதனால் இந்தப் பாட்டைப் பெண்ணை முன் வைத்துப் பாடியிருந்தால் ஆணின் அழகைக் கூறி அந்த அழகும் மாம்ஸ வசாதி விகாரம் என்று சொல்லியிருப்பார் என்று தோன்றுகிறது.
அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை எக்காலத்திலும் ஆணை மயக்கும் பெண்ணின் அங்கங்களில் முதன்மையானவற்றை இங்கே சொல்லியிருக்கிறார். சொல்வதற்குப் பெரிய பட்டியல் இருந்தாலும் எடுத்துக்காட்டாக இருப்பதிலேயே அதிகம் கவரும் இரண்டை மட்டும் சொன்னால் போதும் என்று நினைத்தாரோ என்னவோ மார்பகங்களையும் தொப்புளையும் மட்டும் சொல்லி மற்றவற்றை உய்த்துணர விட்டுவிட்டார்.
ஆண் பெண்ணைப் பற்றியும் பெண் ஆணைப் பற்றியும் நினைக்கும் போதெல்லாம் முன் வந்து நிற்பவற்றை 'ஊனும் கொழுப்பும் மாறி நிற்கும் வடிவங்கள்' என்று மீண்டும் மீண்டும் நினைத்தால் தானே புலனடக்கம் வந்துவிடும் என்பது உண்மை தான்.
--
ᄊムん乇
ᄊムん乇