Tuesday, November 24, 2009


mahendran-KrishnaCowherdBoysEating

ஆகா. அழகான பாடல் கேட்கிறதே அங்கே. யார் பாடுவது?
ஓ. கடைத்தெருவில் இந்த இடைச்சிறுவர்கள் பாடிக் கொண்டு செல்கிறார்கள். என்ன விந்தை? பால், தயிர், வெண்ணெய் என்று கூவி விற்காமல் இந்தச் சிறுவர்கள் வேறு ஏதோ பாடிக் கொண்டு செல்கிறார்களே. நாமும் கூர்ந்து கேட்போம்.
ச்ரி க்ருஷ்ண விஷ்ணோ மது கைடபாரே
பக்தானுகம்பின் பகவன் முராரே
த்ரயஸ்வ மாம் கேஸவ லோகநாத
கோவிந்த தாமோதர மாதவேதி
அருமை அருமை. என்ன ஒரு சந்தம். இவர்கள் ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் வரும் போது இந்த அழகான பொருள் நிறைந்த பாடலைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போலிருக்கிறதே. இந்த இனிய பாடலைக் கேட்பதற்காகவே கடைத்தெருவிற்கு அடிக்கடி வர வேண்டும்.
இந்த நான்கு வரிகளில் எத்தனை எத்தனை கதைகள் சொல்லிவிட்டார்கள். க்ருஹ்ணோதி இதி க்ருஷ்ண என்பார்கள் பெரியவர்கள். கவருபவன் எவனோ அவனே கிருஷ்ணன். க்ருஷியதி இதி க்ருஷ்ண என்றும் சொல்வார்கள். பண்படுத்துபவன் என்பதால் இவன் கிருஷ்ணன். அவன் எங்கும் நிறைந்தவன். விஷ்ணு. மது கைடபர்கள் என்னும் அசுரர்களின் எதிரி. பக்தர்களுக்கு அருளுபவன். வலிமை, புகழ், செல்வம், அறிவு, அழகு, பற்றின்மை என்ற ஆறு குணங்கள் கொண்டவனே ஆதி பகவன். முரன் என்னும் அசுரனின் எதிரி. அழகான சுருண்ட முடியைக் கொண்டவன் கேசவன். உலகங்களுக்கெல்லாம் தலைவன் லோகநாதன். அவனை இந்தச் சிறுவர்கள் கடைத்தேற்ற அழைக்கிறார்கள். த்ரயஸ்ய மாம் என்று நாம் ஒவ்வொருவரும் பாட வேண்டுமே. பாடுவோமே. கண்ணா கோவிந்தா தாமோதரா மாதவா எம்மைக் கரையேற்று. எம்மைக் கரையேற்று.
--
ᄊムん乇

Saturday, November 7, 2009

வந்தே பிருந்தாவனசரம்


la-rama.jpg
யாதவாத்புதயம்! கண்ணனின் திருக்கதையை மிக அழகாகச் சொல்லும் ஒரு வடமொழிக் காவியம்! வேதாந்த தேசிகன் என்னும் வைணவ ஆசாரியர் இயற்றியது! இதன் முதல் சுலோகம் இந்த சுலோகம். மிக அழகான சுலோகம்.


வந்தே பிருந்தாவனசரம் வல்லவீ ஜன வல்லபம்
ஜயந்தீ ஸம்பவம் தாம வைஜயந்தீ விபூஷணம்


கண்ணன் என்றவுடனே அனைவருக்கும் நினைவிற்கு வரும் ஒன்றைச் சொல்லி முதல் வரியைத் துவங்குகிறார் ஆசாரியர். அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு! அந்த அன்பே வடிவமாக ஆயர்பாடியில் திரிந்தவர் கோபியர்களும் கோபர்களும். அந்த அன்பெல்லாம் பெற்று அன்பின் இமயமாய் திகழ்ந்தான் கண்ணன்!

பிருந்தாவனசரம் வல்லவீ ஜன வல்லபம்! பிருந்தாவனத்தில் வாழ்ந்தவன்! அவனிடம் அன்பு கொண்டிருந்த அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்தவர்கள் மேல் அன்பு கொண்டவன்!

அடுத்த வரியில் ஆசாரியரின் மொழி விளையாட்டு தொடங்குகிறது. ஜயந்தீ என்று ஒரு பொருளிலும் வைஜயந்தீ என்று வேறொரு பொருளிலும் சொல் அமைய அடுத்த வரியைப் பாடியிருக்கிறார்.

சஹஸ்ரநாமம் என்றால் அது விஷ்ணு சஹஸ்ரநாமம் தான். அது போல் ஜயந்தி என்றால் அது கிருஷ்ண ஜயந்தி தான்! வேறு எத்தனையோ ஜயந்திகள் இருந்தாலும் ஜயந்தி என்ற சொல் கிருஷ்ண ஜயந்திக்கே விதப்பான (சிறப்பான) ஒன்று.

ஜயந்தீ ஸம்பவம்! குமாரஸம்பவம் என்று சிவகுமாரனின் பிறப்பைக் கூறும் காவியத்தைப் படைத்தானே காளிதாசன்! அங்கே வரும் அதே பொருளில் தான் இங்கேயும் ஸம்பவம் என்ற சொல் அமைகிறது! கிருஷ்ண ஜயந்தியில் பிறந்தவன் கண்ணன்!

தாம வைஜயந்தீ விபூஷணம்! மாலைகளில் எல்லாம் சிறந்த மாலை காட்டுப்பூக்களால் ஆன பல வண்ணப் பூக்கள் நிறைந்த மணமுள்ள மலர்கள் சிலவும் மணமில்லா மலர்கள் சிலவும் ஆன வைஜயந்தீ என்னும் மலர் மாலை!

காட்டில் இந்த யாதவன் கன்றுகள் மேய்க்கச் செல்லும் போது அங்கு மலர்ந்திருக்கும் பலவண்ண மலர்களைக் கொய்து மாலையாக்கி அணிந்து கொள்வானாம். அப்படிப்பட்ட வைஜயந்தீ மாலையை மிக அழகான அணிகலனாக அணிந்து கொண்டிருக்கும் எளிமையானவன் எங்கள் கண்ணன்!

அந்த முழுமுதற்பொருளை நீர்மையின் தீரத்தை 'வந்தே' என்று பலமுறை போற்றி வணங்குவோம்!

--
ᄊムん乇