Tuesday, January 11, 2011

Shobana ends her life



Shobana

சென்னை: கோட்டூர்புரத்தில், துணை நடிகை, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், காதல் தோல்வி காரணமாக இருக்குமோ என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கோட்டூர்புரம், குடிசை மாற்று வாரிய குடியிருப்பைச் சேர்ந்த ஜெயராமன் - ராணி தம்பதியினரின் இரண்டாவது மகள் ஷோபனா (32); துணை நடிகை; இன்னும் திருமணமாகவில்லை. நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் காமெடி ரோல்களில் நடித்துள்ள இவர், நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தியுடன், காமெடி சீரியலிலும் நடித்துள்ளார். நடிகர் வடிவேலுவிற்கு ஜோடியாக பல படங்களில் காமெடி காட்சிகளில் நடித்துள்ள இவர், ஒருவரை காதலித்து வந்ததாகவும், காதல் தோல்வியில் முடிந்ததாகவும் கூறப்படுகிறது. அதன்பின், ஷோபனா திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். மஞ்சள் காமாலை, ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டு, அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால், மனதளவில் பாதிக்கப்பட்ட நிலையில் ஷோபனா இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை ஷோபனா வீட்டில் இருந்த போது, 10.30 மணிக்கு, ஷோபனாவின் தாய் ராணி வங்கிக்கு சென்றுவிட்டார். அவர், வங்கிப் பணியை முடித்துவிட்டு, 12.30 மணிக்கு வந்து பார்த்தபோது, வீட்டில் உள்ள மின் விசிறியில் நைலான் துப்பட்டா கொண்டு தூக்கிட்டு ஷோபனா தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. இதுகுறித்து, கோட்டூர்புரம் போலீசிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடம் வந்து, ஷோபனாவின் உடலை கைப்பற்றி, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.